தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Search This Blog

Friday, 28 July 2017

மிரள வைத்த விவேகானந்தரின் `வலிமை’

மிரள வைத்த விவேகானந்தரின் `வலிமை’
===============================
ஒருமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் சுவாமி விவேகானந்தர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, அவர் இருந்த பெட்டியில் அவரைத் தவிர 2 வெள்ளையர் இருந்தனர்.
விவேகானந்தர் அணிந்திருந்த காவி உடையை பார்த்த அவர்கள், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர்.திட்டவும் கூட செய்தனர்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர் அமைதியாகவே இருந்தார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை காட்டிக்கொள்ளவேஇல்லை.
ஒரு ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், அங்கிருந்த ஒருவரிடம், `இங்கே தண்ணீர் கிடைக்குமா?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார் விவேகானந்தர்.
இதை கவனித்த 2 வெள்ளையர்களும் அதிர்ச்சி ஆனார்கள். விவேகானந்தர் தனது இருக்கையில் வந்து அமர்ந்ததும் அவர் அருகில் பவ்வியமாக சென்றனர்.
`நாங்கள் இவ்வளவு நேரமும் உங்களை கேலி செய்தோம். நீங்கள் எங்களை எதிர்த்து ஒரு கேள்விகூட கேட்கவில்லையே… ஏன்..?’ என்று கேட்டனர்.
அதற்கு விவேகானந்தர், `நான் முட்டாள்களை சந்திப்பது இது முதல் தடவை அல்ல’ என்றார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வெள்ளையர்கள், விவேகானந்தரை தாக்க முயன்றனர்.
விவேகானந்தரும் அதை எதிர்கொள்ள தயாராக எழுந்தார்.
அவரது வலிமையான உடல் அமைப்பையும், பலமான கைகளையும் பார்த்த அவர்கள், அப்படியே பெட்டிப் பாம்பாக அமைதியாகிவிட்டனர். செல்ல வேண்டிய இடம் வரும்வரை அப்படியே இருந்தனர்.
துறவிகளிடம் அமைதி, எளிமை, அன்பு மட்டுமின்றி, வலிமையும் இருக்கும் என்பதற்கு சுவாமி விவேகானந்தரே சிறந்த உதாரணம்.

இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள் ( Thirukkural of the Day)

*அதிகாரம் 14. ஒழுக்கம் உடைமை (The Possession of Decorum)*

*குறள் 133:*
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்  இழிந்த பிறப்பாய் விடும்

*மு.வ உரை:*
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

*English Meaning:*
Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth

🔈 Audio/ஒலிப்பதிவு 🔈
http://v.duta.us/Efs5AgAA (368 kB)

உடல் உறுப்பு தானம்... எந்த உறுப்பை எவ்வளவு நேரத்துக்குள் பொருத்த வேண்டும்?

உடல் உறுப்பு தானம்... எந்த உறுப்பை எவ்வளவு நேரத்துக்குள் பொருத்த வேண்டும்?

இதயம் - 6 மணி நேரம் வரையிலும்

சிறுநீரகம் (Kidney) - 72 மணி நேரம்

கல்லீரல் (Liver) - 24 மணி நேரம்

நுரையீரல் (Lungs) - 4 - 6 மணி நேரம்

கணையம் (Pancreas) - 24 மணி நேரம்

கண் விழித்திரை (Corneas) - 14 நாள்கள்

எலும்பு மஜ்ஜை (Bone Marrow) -5 நாள்கள்

தோல் (Skin) - 5 வருடங்கள் வரையிலும்,

எலும்பு (Bone) - 5 வருடங்கள் ,

இதயத்தின் வால்வுகள் ( Heart valves) - 10 வருடங்கள்

வரையிலும் பதப்படுத்தி வைத்திருந்து மற்றவருக்குப் பயன்படுத்த முடியும்.

எனவே, உடல் உறுப்புகளை தானம் செய்வதற்குப் பதிவு செய்வதோடு உரிய நேரத்தில் உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு கிடைக்கச் செய்வதும் அவசியம்.

Thursday, 27 July 2017

பொறியியல் கல்லூரிகளில் இனி அரியர்ஸ் கிடையாது.... புதிய பாடத்திட்டம் அமல்

*பொறியியல் கல்லூரிகளில் இனி அரியர்ஸ் கிடையாது.... புதிய பாடத்திட்டம் அமல்*

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 'அரியர்ஸ் வைக்காதவன் அரைமனிதன்' என்ற கல்லூரி பழமொழிக்கு முடிவு கட்டப் போகிறது அண்ணா பல்கலைக்கழகம்.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 4 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். 2013-ம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்விக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிபால், தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு ஆணையர் ராஜேந்திர ரத்னு, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி டீன் டி.வி.கீதா உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் அரியல்ஸ் முறை ரத்து குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கல்விக்குழு டீன் டி.வி.கீதா, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் போது அவர் வேறு ஒரு துறையில் கண்டிப்பாக அவரது விருப்பப்படி 2 பாடங்களை தேர்ந்து எடுத்து படிக்க வேண்டும்.

*இந்த ஆண்டு முதல் அமல்*

இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 518 பொறியியல் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகளில் பயிற்சி, கம்ப்யூட்டர் அறிவு ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.

*2 விருப்பப் பாடங்கள் பயில வேண்டும்*

புதிய பாடத்திட்டத்தின்படி ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் மாணவர்கள் மற்றொரு துறையில் குறைந்தது 2 விருப்ப பாடங்களையாவது படிக்க வேண்டும். இது விருப்பத்தின் அடிப்படையில் படிக்கும் முறை என்று அழைக்கப்படுகிறது.

*கட்டாயம் படிக்க வேண்டும்*

இதன்படி மெக்கானிக்கல் பிரிவு படிக்கும் மாணவர்கள் 2 பாடங்களுக்கு பதிலாக கணினி அறிவியல் பாடத்தில் ஏதாவது இரு பாடங்களை எடுத்து படிக்க வேண்டும். இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பி.இ. படிக்கும் போது 3-வது ஆண்டு கடைசியில் மாணவர்கள் 8.5 கிரேடு மதிப்பெண்கள் எடுத்திருந்து, அவர்கள் கடைசி ஆண்டு படிக்க முடியாவிட்டால் 5-வது ஆண்டு கல்லூரிக்கு வந்து 4-வது வருட படிப்பை தொடரலாம்.

*நோ 'அரியர்ஸ்'*

பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் 'அரியர்ஸ்' முறை தேர்வு இனி கிடையாது. ஒரு மாணவர் பி.இ. முதல் பருவ தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவருடைய 'இன்டர்னல்' மதிப்பெண் ரத்து ஆகிவிடும். அவர் மீண்டும் 3வது பருவ தேர்வில் தேர்ச்சி பெறாத முதல் பருவத்திற்கான 'இன்டர்னல்' தேர்வை எழுத வேண்டும். பிறகு அவர் பருவ தேர்வை எழுத வேண்டும்.

*7 ஆண்டுகளுக்குள் எழுத வாய்ப்பு*

அவர் விரும்பினால் தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய வகுப்பில் உட்கார்ந்து படிக்கலாம். தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய 'இன்டர்னல்', பருவ தேர்வை 7 ஆண்டுக்குள் எழுதலாம். இதனால் 'அரியர்ஸ்' என்ற வார்த்தை ஒழிக்கப்படுகிறது.

*பொறியியல் படிப்பு*

பொறியியல் படிப்பு படிப்பவர்கள் 4 ஆண்டுகள் படிப்பை முடிக்காமல் அரியர்ஸ் வைத்து 10 ஆண்டுகள் வரை எழுதி வருகின்றனர். ஒவ்வொருமுறையும் வினாத்தாள் தயாரிக்க கடும் சிரமம் ஏற்படுவதாக கூறும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள், இதற்கு முடிவு கட்டவே தற்போது புதிய முறையை அமல்படுத்தியுள்ளனர்.

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.

இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவுற்றது ,,..

ஒரு நிமிடக்கதை ! இந்தியனின் மூளை !

ஒரு நிமிடக்கதை !
இந்தியனின் மூளை !
நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற வங்கிக்குள் நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த அதிகாரியிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும் தான் இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.
அதற்கு அந்த அதிகாரி, உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என்றார். இதைக் கேட்ட அந்த இந்தியர் வங்கிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தனது புத்தம்புதிய ஃபெராரி கார் சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்தார். கூடவே காரின் உரிமைப் பத்திரங்களையும் கொடுத்தார்.
வங்கி அதிகாரி திருப்தியுடன் அந்த இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார். 250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அனுபவித்து சிரித்தனர்.
பிறகு வங்கியின் ஊழியர் ஒருவர் அந்தக் காரை வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார்கள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.இரண்டு வாரங்கள் கழித்து திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் அதற்கான வட்டியாக 5.41 டாலரயும் திருப்பிக்கொடுத்தார்.
அவருக்கு கடன் கொடுத்த அந்த வங்கி அதிகாரி, "சார், உங்களுடன் வியாபாரம் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நமது பரிவர்த்தனை மிக நல்ல முறையில் நடந்தது. ஆனா ஒரே ஒரு விசயம்தான் எங்களுக்கு இன்னும் புரியலெ, நீங்க போன பிறகு உங்களைப் பத்தி நாங்க விசாரிச்சோம். நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது. இவ்வளவும் பெரிய பணக்காரர் கேவலம் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்" என்றார்.
அதற்கு அந்த இந்தியர், "எனக்கு நியூயார்க் நகரத்தில் கார் நிறுத்தும் வசதி இல்லை. பிறகு எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை இவ்வளவு குறைந்த 5.41 டாலர் கட்டணத்திற்கு அதுவும் நான் திரும்பி வரும் வரை யாரும் திருடிக்கொண்டுப் போகாமல் பாதுகாப்பாக நிறுத்த முடியும்" என்றார்.

Saturday, 22 July 2017

வாட்ஸ் ஆப்-பில் வரவிருக்கும் 6 புதிய அம்சங்கள்..!!

வாட்ஸ் ஆப்-பில் வரவிருக்கும் 6 புதிய அம்சங்கள்..!!

தகவல் தொடர்பை எளிமைப்படுத்தியுள்ள வாட்ஸ் ஆப் மெசேஜிங் செயலி, உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களால் உயயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலி குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது வாட்ஸ் ஆப்-பில் புதிய அம்சங்களை சேர்ப்பதற்காக அதன் பீட்டா வெர்ஷன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப்-பின் புதிய பதிப்பில் புதிதாக 6 அம்சங்களை சேர்க்கப்பட உள்ளது தெரியவந்துள்ளது. அந்த அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.

1. யூடியூப் வீடியோக்களை பின்னணியில் செயல்படுத்தும், பிப் (PIP):
வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் சாட் விண்டோவில், நேரடியாக யூடியூப் வீடியோக்களை பயனர்கள் பிளே செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்ஆப் சோதனை செய்கிறது. வீடியோ பிளேபேக்கிற்கான யூடியூப் பயன்பாட்டை தனியாக திறக்க வேண்டிய அவசியத்தை இந்த அம்சம் அகற்றும்.

2. யுபிஐ பணப்பரிமாற்றம்:
வாட்ஸ் ஆப் வாயிலாக பணப்பறிமாற்றங்களை எளிதாக மேற்கொள்ள வசதியை ஏற்படுத்தும் வகையில், யுபிஐ (UPI)-ஐ ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

3. மெசேஜ் ரீகால்:
மெசேஜ் ரீகால் என்ற புதிய அம்சம் கடந்த டிசம்பர் மாதம் முதல் சோதனையில் உள்ளது, இதன்மூலம் அனுப்பிய மெசேஜை திரும்பப்பெற்றுக்கொள்ளும் வசதி கிடைக்கும்.

4. லைவ் லொகோஷன் ஷேரிங்:
லைவ் லொகேஷன் ஷேரிங் வசதியின் மூலமாக, வாட்ஸ் ஆப் பயனர்கள் தங்களுடைய இருப்பிடத்தை நேரலையாக மற்றவர்களுடன் ஷேர் செய்யும் வசதி கிடைக்கப்போகிறது. இதற்கு முன்பாக லொகோஷன் ஷேரிங் மட்டுமே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
1 நிமிடம், 2 நிமிடம், 5 நிமிடம் அல்லது அளவில்லாமல் என்ற முறையில் இருப்பிடத்தை ஷேர் செய்யும் வசதி கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

5. எண் மாற்றம் குறித்து தகவல் தெரிவிக்கும் வசதி
பயன்பாட்டில் உள்ள வாட்ஸ் ஆப் எண்ணை வேறொரு எண்ணுக்கு மாற்றும் போது, அதனை காண்டாக்ட் லிஸ்டில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தும் வசதியை இந்த அம்சம் அளிக்கும்.

6. அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் வசதி:
இறுதியாக நாம் பார்க்க இருக்கும் இந்த புதிய அம்சம் மெசேஜ் ரீகால் அம்சத்திற்கு இணையானது. மெசேஜ் ரீகால் மூலம் அனுப்பிய மெசேஜை முற்றிலும் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம், ஆனால் இந்த புதிய அம்சத்தில் அனுப்பிய மெசேஜில் குறிப்பிட்ட பாகங்களை மட்டும் எடிட் செய்து கொள்ளலாம்.

இந்த 6 புதிய அம்சங்களும் தற்போது வாட்ஸ் ஆப் பீட்டா-வில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்து வரவிருக்கும் மேம்படுத்தப்பட்ட பதிப்பில் இந்த 6 புதிய அம்சங்கள் இடம்பெறப் போகிறது. இதன் மூலம் வாட்ஸ் ஆப் பயன்பாடு மேலும் சுவாரஸ்யம் நிறைந்ததாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
.
.
.
.